மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ரூ.4,000 கொரோனா நிவாரணம்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே மக்கள் நலன் சார்ந்து இயங்குவதில் திமுக அரசு முன்னிலை வகிக்கிறது என்றார்.
மேலும் பேசுகையில், தமிழகத்தில் 33,055 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் 3 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகள் மட்டும் 5 ஆயிரம் உள்ளன. விரைவில் இந்த 5 ஆயிரம் கடைகளை பிரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். தற்போது 6,990 நியாய விலைக்கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சொந்த கட்டடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பாக்கெட்களில் ரேஷன் பொருட்கள்
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் வகையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் 2,608 நேரடி கொள்முதல் நிலையங்களில் எந்தவொரு தவறும் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார.
கடந்த ஆட்சியில் மக்களுக்கு தரமான அரிசி வழங்குவது குறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை. தற்போது தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன் பொருட்களை பாக்கெட் வடிவில் மக்களுக்கு கொடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Comments
Post a Comment