தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்
மனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அதுதான் தூக்கத்தில் பேசுவது.
குறட்டை விடுவது அளவிற்கு இது பொதுவான பிரச்சனையாக இல்லையென்றாலும் இப்பொழுது இளைஞர்களிடையே இது அதிகம் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக பணிச்சுமை மற்றும் அளவில்லாத இன்டர்நெட் உபயோகமும்தான். இந்த பதிவில் தூக்கத்தில் பேச காரணம் என்ன என்பதையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
தூக்கத்தில் பேசுதல்
தூக்கத்தில் பேசுவது என்பது சம்மிலாக் என அழைக்கப்படும் பராசோமனியாவின் ஒருவகையாகும். தூக்கத்தில் செய்யும் அசாதரண செயல் என்பது இதன் பொருள். மனஅழுத்தம், சோர்வு, மதுப்பழக்கம், தூக்கமின்மை என இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இது மட்டுமின்றி மரபணு மூலமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். மருத்துவரீதியாக இதில் எந்த பாதிப்பும் இல்லை.
தெரிந்து கொள்ளவேண்டியது
தூக்கத்தில் பேசுபவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் அல்லது பேசுகிறார்களா என்பது 90 சதவீதம் தெரிய வாய்ப்பில்லை. காலையில் எழுந்து நடந்ததை கூறினால் இல்லவேயில்லை என்று வாதிடுவார்கள். பகல் நேரங்களில் பேசுவதற்கும், தூக்கத்தில் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இந்த பேச்சு அன்று நடந்த சம்பவங்கள் பற்றியோ அல்லது தூக்கத்தில் வரும் கனவுகள் பற்றியோ இருக்கலாம்.
யாரெல்லாம் தூக்கத்தில் பேசுவார்கள்?
தூக்கத்தில் பேசுவது என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். ஆனால் புள்ளி விவரங்களின் படி பெண்களை விட ஆண்களும், குழந்தைகளும் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தூக்கத்தில் ரகசியங்களை உளறிவிடுவார்களா?
இந்த பயம் பெரும்பாலும் ஆண்களுக்கே இருக்கும். ஆனால் இதில் ஆறுதலான செய்தி யாதெனில் தூக்கத்தில் நீங்கள் ரகசியங்களை ஒருபோதும் பேசமாட்டிர்கள். சொல்லப்போனால் நீங்கள் பேசுவது பெரும்பாலும் யாருக்கும் புரியாது. உங்கள் துணையோ அல்லது பெற்றோரோ நீங்கள் பேசுவது என்ன என்பதை கண்டறிய முயற்சித்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிலசமயம் நீங்கள் பேசுவது முழுமையாக கற்பனையாக கூட இருக்கலாம். எனவே நீங்கள் பேசியதை கண்டுபிடித்து விட்டேன் உன்மையை கூறு என்று உங்கள் மனைவி கேட்டால் நீங்களாக உளறி மாட்டிக்கொள்ளாதீர்கள்.
வெளிப்புற காரணங்கள்
தூக்கத்தில் பேச பல வெளிப்புற காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு அதிக மனஅழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, பாதி தூக்கம் போன்றவை காரணமாக இருக்கலாம். குறிப்பாக மது அருந்திவிட்டு தூங்கும்போது இந்த பிரச்சினை அதிகம் ஏற்படலாம். மேலும் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புள்ளது.
மரபணு
ஒருவேளை உங்கள் பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது தாத்தாவுக்கோ இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தந்தைக்கு இந்த பிரச்சினை இருந்தால் குழந்தைக்கு இந்த பிரச்சினை ஏற்பட 90 சதவீத வாய்ப்புள்ளது.
தூக்க வியாதிகள்
தூக்கம் தொடர்பான வியாதிகளான அப்னியா, குழப்பநிலை, REM தூக்க நிலை போன்ற வியாதிகள் இதனை ஏற்படுத்தலாம். இதில் முக்கியமான ஒன்று கெட்ட கனவுகள், நீங்கள் தூக்கத்தில் பேசுவது பெரும்பாலும் உங்கள் கனவின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.
பயம்
எந்த வயதினரையும் தூக்கத்தில் பேச வைக்க கூடிய ஒரு உணர்வு பயம் ஆகும். பேய் படம் பார்த்தாலோ அல்லது பயமுறுத்தும் ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தாலோ அது அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக தூக்கத்தில் பேச தொடங்குவார்கள்.
மனநலம்
இளைஞர்கள் தூக்கத்தில் பேசுவது என்பது அவர்கள் மனநலம் தொடர்பான ஒன்றாக கருதப்படுகிறது. இது அவர்களின் மனதை வெகுவாக பாதிக்கக்கூடும். இதை சாதாரணமான ஒன்றாக நினைக்க கூடாது.
மருந்துகள்
நீங்கள் சாப்பிடும் சில மருந்துகள் கூட உங்களை தூக்கத்தில் பேச தூண்டலாம். குறிப்பாக மாண்டேலுக்காஸ்ட் என்னும் ஆஸ்த்மாவுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து பார்சோம்னியாவை உண்டாக்கக்கூடும். இதன் விளைவாக தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
ஆபத்தானதா?
மருத்துவரீதியாக பார்க்கும்போது இது ஆபத்தானதல்ல. ஆனால் இது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது அருகில் தூங்குபவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
தடுக்கும் முறைகள் இதனை தடுப்பது என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. முதலில் நீங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்தவும், மது அருந்தும் பழக்கத்தை குறைத்து கொள்ளுங்கள், மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள், இது எதுவுமே பயன் தரவில்லை எனில் மருத்துவரை நாடுங்கள், மருந்துகளின் மூலமும் இதனை சரி செய்யலாம்.
Thanks For Reading Dont Forgot To Share By Arun Sajan
Comments
Post a Comment