காசநோயின் தலைநகரம் இந்தியா என்று சொல்லும் அளவுக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மொத்த காசநோயாளிகளில் 27 சதவிகிதம் பேர் இந்தியர்களே. ஒரு நாளைக்கு 1,150 பேர் என ஆண்டுக்கு 4.2 லட்சம் பேரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது இந்தக் கொடிய நோய்.
Tuberculosis
இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்தியாவில் காசநோய் அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தாமதமாகக் கண்டறியப்படுவதே. இந்த நிலையை மாற்ற முயன்று வருபவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர் ராகுல் பாத்ரி முக்கியமானவர். இவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். அந்தத் தாக்கம்தான் காசநோயைக் கண்டறியும் டிம்ப்ரே (Timbre) என்ற மொபைல் ஆப்பை உருவாக்க அவரைத் தூண்டியது.
காசநோய் மட்டுமன்றி நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி), ஆஸ்துமா மற்றும் சாதாரண இருமல், அறிகுறியற்ற நிலையில் உள்ள நுரையீரல் சார்ந்த பிற நோய்களையும் துல்லியமாகக் கண்டறியும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, பெயர், வயது, தொழில், எடை, உயரம், மருத்துவப் பின்புலம், பழக்கவழக்கங்கள், தூக்கம், மற்றும் இருமல் சார்ந்த சில அடிப்படைத் தகவல்களை அளிக்க வேண்டும். பின்னர் செயலியில் உள்ள மைக்ரோபோன் பட்டனை அழுத்தி இருமல் ஒலியைப் பதிவுசெய்ய வேண்டும். அதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட இருமல் ஒலியானது அந்த நிறுவனத்தின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, காசநோய் இருக்கிறதா இல்லையா என்பதைப் பயனாளர்களுக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கும்.
Tuberculosis
"இந்தச் செயலியால் நோயை 85% துல்லியமாகக் கணித்துவிட முடியும். ஆனால், இது காசநோய் இருப்பதை உறுதி செய்வதற்கு மட்டுமே. நோய் உறுதி செய்யப்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்" என்கிறார் ராகுல் பாத்ரி.
இதுவரை 2,000 பேருக்கு நோயைக் கண்டறிய இந்தச் செயலி பயன்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment