எங்கே சென்றாலும் பெரிய வரிசை நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கும். வரிசையைக் கண்டு பயந்தே திட்டத்தை மாற்றுபவர்கள் உண்டு.
இது போன்ற பிரச்சனைகளில் நமக்கு இளைப்பாறுதல் தருகிறது ரயில்வே நிர்வாகத்தின் UTS (உள்ளூர் ரயில்) செயலி (App). DOWNLOAD
திறன்பேசி (Smart Phone) போதும்
இச்செயலி மூலம் உள்ளூர் ரயில்களில் நம்மால் நம் திறன்பேசி மூலமாகவே அனைத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நடைமேடை சீட்டு, மற்ற இடங்களுக்காகச் செல்வதற்கான பயணசீட்டு, திரும்ப வருவதற்கான பயணச்சீட்டு (Return ticket) என்று செயலியலியே முன்பதிவு செய்ய முடியும்.
வரிசையில் நின்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. இதில் நடுவில் நுழைந்து நம்மைக் கடுப்படிப்பவர்கள் தனி.
இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்த போது அலுவலக நண்பர் செந்தில் இச்செயலியை அறிமுகப்படுத்தினார்.
இச்செயலியை ரயிலில் செல்பவர்கள் பயன்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். இது குறித்துத் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.
இதை எப்படிப் பயன்படுத்துவது?
https://www.utsonmobile.indianrail.gov.in முகவரியிலோ அல்லது UTS செயலியிலோ பயனர் கணக்கை துவங்கி Wallet ல் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள்.
குறைந்த பட்சம் 100₹, இதற்குச் சேவைக்கட்டணம் 2₹ + . நியாயமாக மத்திய அரசு அறிவிப்பின் படி இவர்கள் சேவைக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது.
இதன் பிறகு வரிசையை மறந்து விடுங்கள். எந்த நகருக்கு சென்றாலும் இதைப் பயன்படுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொள்ளலாம்.
பயன்கள் என்ன?
மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், வரிசையில் நிற்க வேண்டியதில்லை, சில்லறை பிரச்சனையில்லை, நேரம் மிச்சமாகிறது, பதட்டம் குறைகிறது, காகிதம் வீணாவதில்லை.
புதிய இடங்களுக்குச் செல்லும் போது பயணச்சீட்டு கொடுக்கும் இடம் தேடி அலைந்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
ஏனென்றால், சில இடங்களில் படி ஏறிச் சென்ற பிறகு “அலுவலகம் இங்கே இல்லைங்க.. அங்கே போங்க” என்று கூறும் போது செம்ம கடுப்பாகும். திரும்ப மலை ஏறி இறங்க வேண்டும்.
குறைகள் என்ன?
இதில் உள்ள குறை என்னவென்றால், GPS வசதி சரியாக வேலை செய்வதில்லை. எனவே, ரயில் நிலையம் அருகில் நின்றால் கூட நிலையத்தைக் காட்டுவதில்லை. மிகப்பெரிய கடுப்பு இது.
எனவே, நாம் வரும் வழியிலேயே எங்காவது நின்று இதை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து நிலையங்களிலும் இது போல நடப்பதில்லை இருப்பினும் வழக்கமாகச் செல்லும் இடம் என்றால் முன்பே முன் பதிவு செய்து கொள்வது நல்லது.
நான் தற்போது எங்கள் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் செல்வதால், மிக மிகப் பயனுள்ளதாக உள்ளது. வீட்டில் இருந்து கிளம்பி தெருக்கு வந்தவுடன் முன்பதிவு செய்து விடுவேன்.
முன் பதிவு செய்த நேரத்தில் இருந்து, அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் பயணிக்க வேண்டும்.
இச்செயலி Android மற்றும் Windows இயங்கு தளங்களுக்கு மட்டுமே உள்ளது.
வசதிகள்
மாதாந்திர பயணச்சீட்டையும் இதிலேயே எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு மாதாந்திர பயணச்சீட்டை விட தினமும் எடுப்பது குறைவான செலவைக் கொடுக்கலாம் காரணம், அனைத்து நாட்களும் இச்சேவையை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
MRTS ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு அலுவலகத்துக்கே ரயிலில் செல்ல வேண்டிய தூரம் இருப்பதால்
, இச்செயலி மிகப் பயனுள்ளதாக உள்ளது.
GPS பிரச்னையை விரைவில் மேம்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இப்பிரச்சனையைத் தவிர அசத்தலான செயலி இது.
இச்செயலியை அனைவருமே நிறுவி Wallet ல் 100₹ போட்டு வைத்துக் கொள்வது நல்லது. நமக்கு எப்போது தேவைப்படும் என்று தெரியாது. அவசரமான நேரங்களில் நமக்கு உதவலாம்.
நீங்கள் இதைச் செய்யவில்லையென்றாலும், என்றாவது நீங்கள் ரயில்நிலையம் சென்று கடுப்பாகும் போது என்னுடைய இக்கட்டுரை நினைவுக்கு வரும்
.

Comments
Post a Comment